search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கை இல்லா தீர்மானம்"

    சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லாப்வென் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #StefanLofven #SwedenParliament
    ஸ்டாக்ஹோம்:

    சுவீடன் நாட்டின் பிரதமராக ஸ்டீபன் லாப்வென் இருந்து வந்தார். அவர் மீது அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204 ஓட்டுகளும், எதிராக 142 ஓட்டுகளும் விழுந்தன. இதையடுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ஸ்டீபன் லாப்வென் நீக்கப்பட்டார்.



    அடுத்து அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக கட்சித்தலைவர்களுடன் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நார்லென் நாளை (வியாழக்கிழமை) பேச்சு நடத்துவார் என தகவல்கள் கூறுகின்றன. புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஸ்டீபன் லாப்வென், இடைக்கால பிரதமராக இருப்பார் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
    நாடாளுமன்ற மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவை திரட்டுவதில் பா.ஜனதா உறுதியுடன் உள்ளது.
    புதுடெல்லி:

    5-வது ஆண்டில் அடி எடுத்து வைத்து உள்ள மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, தனது ஆட்சிக்காலத்தில் முதல் முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கிறது.

    4 ஆண்டுகளாக அந்த கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம், பசுக்களை காக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்லும் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விவகாரம் உள்ளிட்டவற்றில், மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.

    இந்த தீர்மானம், இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. விவாதத்தைத் தொடர்ந்து ஓட்டெடுப்பு நடக்கிறது.

    தற்போது மக்களவையின் உறுப்பினர் பலம் 533 ஆக உள்ளது. (மொத்த இடங்கள் 545 என்றாலும், 10 இடங்கள் காலியாக உள்ளன. 2 நியமன எம்.பி.க்களுக்கு ஓட்டு கிடையாது). எனவே 267 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தாலே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அரசு தோற்கடித்து விட முடியும்.

    314 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டி விட முடியும் என்று பாரதீய ஜனதா கட்சி வட்டாரங்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றன. அந்தப் பட்டியலில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பெயர் சேர்க்கப்படவில்லை.

    சபாநாயகருடன் சேர்த்து அந்த கட்சிக்கு 274 எம்.பி.க்கள் உள்ளனர். அதன் கூட்டணியில் உள்ள சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்களும், லோக்ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலிதளத்துக்கு 4 எம்.பி.க்களும் உள்ளனர். இத்துடன் சிறிய கட்சி எம்.பி.க்களையும் சேர்த்து 314 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டி விட முடியும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக உள்ளது.

    37 எம்.பி.க்களைக் கொண்ட அ.தி.மு.க., நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து ஓட்டுபோடும்.இந்த தகவலை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சூசகமாக தெரிவித்தார்.

    பாரதீய ஜனதா கட்சியுடன் உரசல் போக்கு இருந்த போதிலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கப்போவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

    தலா ஒரு உறுப்பினரை கொண்டு உள்ள தமிழ்நாட்டின் பா.ம.க., மராட்டியத்தின் சுவாபிமானி பக்‌ஷா கட்சிகளின் ஆதரவையும் பெற்று விட முடியும் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

    எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 63 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு 34 எம்.பி.க்கள், பிஜூ ஜனதாதளத்துக்கு 19 எம்.பி.க்கள், தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு 11 எம்.பி.க்கள் இருக்கின்றனர்.

    நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அந்தக் கட்சியின் அனந்தப்பூர் எம்.பி., திவாகர் ரெட்டி, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கூறி உள்ளார். அதுமட்டுமின்றி, கொறடா உத்தரவு ஒரு பிரச்சினையே இல்லை என்றும் அவர் கூறி உள்ளார். எனவே தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பி.க்களில் 15 பேரின் ஆதரவுதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    19 உறுப்பினர்களை கொண்டு உள்ள பிஜூ ஜனதாதளத்தின் நிலைப்பாடு என்ன என்பது இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும்போது அவையில்தான் தெரிய வரும் என அந்த கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து உள்ளார்.

    11 எம்.பி.க்களை கொண்டு உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தெலுங்குதேசத்தின் எதிரி ஆகும். எனவே இந்தக் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கவோ அல்லது ஓட்டெடுப்பை புறக்கணிக்கவோ வாய்ப்பு உள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள் ராஜினாமா செய்து விட்ட நிலையில், அவர்களது விலகல் ஏற்கப்பட்டு உள்ளதா இல்லையா என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது.

    எனவே அந்த கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வருவார்களா என்பதே சந்தேகம். எனவே அவர்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போகும்.

    எனவே மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து விட்டால், நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் மோடி அரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று தெலுங்கு தேச கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் கூறியுள்ளார். #KesineniSrinivas #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதன் மீதான ஓட்டெடுப்பு பாராளுமன்றத்தில் நாளை நடக்கிறது.



    இதன் மூலம் மோடி அரசின் வீழ்ச்சி தொடங்கி விட்டதாக தெலுங்கு தேச கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது ஆந்திர மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட தயார் நிலையில் இருந்தோம். இதை அறிந்து சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார்.

    பா.ஜனதா மிகுந்த நெருக்கடியில் இருப்பது எங்களால் மட்டுமல்ல நாடு முழுவதும் அந்த கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடே உற்று நோக்குகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் மோடி அரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KesineniSrinivas #NoConfidenceMotion #MonsoonSession

    ×